*வணக்கம் வருகைக்கு நன்றி*

Sep 11, 2011

பாண்டி நாட்டு தமிழ்

பாண்டிய நாடு என்றாலே மதுரைதானே நினைவிற்கு வரும். தமிழ்நாட்டிற்குள்ளே மண்வாசம் மிகுந்த,உச்சரிப்பிலே பாசத்துடன் பேசும் தமிழாக எனக்குத் தெரிந்த,பிடித்த தமிழ், மதுரை மாவட்ட தமிழ். பள்ளி விடுமுறையில் மதுரையில் ஒரு கிராமத்தில் வசிக்கும் என் தாத்தா அம்மாச்சி(அம்மாவின் பெற்றோர்) வீட்டிற்கு செல்வது வழக்கம். நான் லண்டனிலிருந்து மதுரை செல்லவில்லை.நாகப்பட்டினத்திலிருந்து மதுரை சென்ற எனக்கு தமிழ் பேசும் வித்யாசத்தில் புரியாமலிருந்ததென்றால் நம்பமுடியுமா?
எனக்கு நினைவில் இருப்பதை பகிர விரும்புகிறேன்.

தூக்குப்பனிய எடுத்துட்டு வா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்ததுண்டு.தூக்குப்பனி என்றால் பிடி உள்ள சின்ன சில்வர் வாலி போல ஒரு பாத்திரம்.

இந்த பெண் தலைமேல்
துணிசுற்றி வைத்திருப்பது
பெயர் சுறுமாடு என்பார்கள்.
சுறுமாட்டிற்கு மேலிருக்கும்
பாத்திரம்தான்,தவளைப்பானை.

குடிநீர் குழாய்கள் அல்லது எந்த குழாய்களானாலும் ,ஆங்கில சொல் என்பது தெரிந்தோ தெரியாமலோ பைப் என்று சொல்வதுதான் வழக்கம்.ஆனால் என் அம்மாச்சி ஊரில் கொலாயில் கொண்ட பானைய வைனு சொன்னபோதும் புரியாமல் விழித்ததுண்டு.அடி பைப்பை  அடிக்கொலாய் என்பார்கள்.மேலும் எனக்குத் தெரிந்தது மண்ணினால் செய்யப்பட்ட பானைதான் பானை.அம்மாச்சி ஊரில் குடம்,தவளை பேர்தான் பானை.தெருவிலும் சாக்கடையிலும் ஓடுது பாரு அது பேர்தான் தவளை,இது பேர் பானை என்பார்கள்.அப்போ அந்த பானைய என்னான்னு சொல்வாங்கன்னா மம்பானை (மண்பானை) என்பார்கள்.

மிக்சி,கிரைண்டர் வருவதற்கு முன் அந்த காலத்தில் கல்லால் ஆன இயந்திரம் இருக்குமே,அதன் பெயர் கொடக்கல்லுனு நாங்க சொல்லுவோம்.அதை ஆட்டுக்கல்லுனு அம்மாச்சி சொல்வாங்க.அம்மிக்கல்லுக்கு பேரு அம்மிக்கல்லுதான்.

ஒண்டியமா போகனுமா என்றால் அவர்களுக்கு புரியாது.தனியா போகனுமா என்றால்தான் புரியும்.ரொம்ப எட்டி(தொலைவில்) இருக்குல என்றாலும் புரியாது.அதென்ன எட்டி?தொலவா இருக்குனு சொல்லு,அல்லது வெகு தூரம்னு சொல்லு என்பார்கள்.

நாம் எழுதும்போதுதான் வந்தேன்,போனேன்,சொன்னேன், என்று எழுதுவோம்.ஆனால் மதுரையில் இன்றும் வந்தேஏ....போனேஏ..., சொன்னேஏ...என்றுதான் பேசுவார்கள்.கேட்கவே ஆசையாக இருக்கும் . நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் அம்மாச்சி ஊரில் பள்ளியில் சேர்ந்து படிக்கும்படியான சூழ்நிலை வந்தது.எனக்கு மறக்க முடியாத நாட்கள் அவைகள்.பெரிய ஆலமரங்கள்,அரசமரங்கள்,வரிசயாக தென்னைமரம்,பனைமரம் பார்டர் போல மலைகள் இவைகளை ரசித்துக்கொண்டே பள்ளிக்குச் செல்வேன்.அங்கு ஆசிரியர்களும் மதுரைத் தமிழில் பேசுவதைப் பார்த்து ரசிக்கவும் முடியாது,சிரிக்கவும் முடியாது.

உதாரணமாக புதுசா வந்திருக்க பிள்ளையா நிஈ.எழுத்துக்கூட்டி வாசிப்பியா?என்றார். என்னவோ வாசிக்கத் தெரியுமான்னு கேக்குறார்னு நினைத்து தெரியாதுனுட்டேன்.நாகப்பட்டினம்ங்கிற வாசிக்க சொல்லித்தரலையா வாத்தியார்க என்றார்.திருதிருன்னு முழித்துக்கொண்டிருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை வாசிக்க சொன்னார்.புத்தகத்தைப் பார்த்து அந்த பெண் சத்தமாக படிக்கத் துவங்கினாள்.அப்பதான் எனக்கு புரிந்தது சாரு படிக்கத் தெரியுமாங்கிறதைதான் வாசிக்கத் தெரியுமானு கேட்டிருந்திருக்கிறார்.படிக்கத் தெரிந்தும் தெரியாதுனு சொல்லிட்டேனேனு அழ ஆரம்பித்துவிட்டேன்.பயத்தில் அழறேன்னு என்னை சமாதனப்படுத்தினார்.சில மாணவர்கள் படித்த பின் நானும் படிக்கிறேன்னு கஷ்டபட்டு சொன்னேன்.ஆசிரியர் புரிந்துகொண்டு    ம்.. என்றதும் படிக்கத் துவங்கினேன்.தமிழ் பாடம்தான் என்ன பாடம் என்று நினைவில்லை.ஒரு பத்தி படித்து முடித்தவுடன் நல்லாதான வாசிக்கிற,ஏன் வாசிக்கத் தெரியாதுன்ன? என்றவுடன் இன்னும் அழுகைதான் வந்தது.

ப்ரேயரில் நிக்கும்போது ஒரு அழகான டீச்சர் ,கிசும்பு பன்றவங்கே தோல உரிச்சிடிவீண்டா,ஒத்தையில நிக்காதடா,வரிசையில நில்லுங்கடானு சொன்னது எனக்கு புரியல.விசாரித்ததில் கிசும்புனா சேட்டைனு ஒருத்தன் சொன்னான்.சேட்டை என்றால் விசமத்தனம்.பத்து நாள் மட்டுமே அங்கு படித்தேன்.இது போன்று பல வார்த்தைகள் தெரிந்துகொண்டேன்.இப்போது நினைவில் இல்லை.என் அப்பா மீண்டும் நாகப்பட்டினத்து பள்ளியிலே சேர்த்துவிட்டார்.

அதற்கு பின் அம்மாச்சி தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்கு வருவோம்.
அவற்றில் சில நினைவுகள்:

 தெருவில்  சைக்களில் சாக்கு பைகள் வைத்து    கொடி முந்திரி, கொடி முந்திரி என்று சத்தமிட்டு வியாபாரி வருவது கண்டு முந்திரிபருப்பைதான் விற்கிறார் என தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.அருகில் வரவும் பார்த்தால் அது திராட்சைப்பழம்.கொடி முந்திரி என்றால்  திராட்சைப்பழமாம்.

ஏதாவது பொருட்களை முறத்தில்  போட்டு சுத்தப்படுத்துவோமே அந்த முறம்  பெயர் சொலகு   என்பார்கள்.
மண்ணெண்ணையை (கரோசின்) சீமஎண்ணைய்  என்பார்கள்.

விளக்கேற்றுவதை -  தீபத்த பொறுத்து என்பார்கள்.
சணலை சரடு என்பார்கள்.பேப்பர் என்றே அனைவரும் சொல்லுவோம்.ஆனால் காகிதம் என்றுதான் சொல்லுவார்கள்.தபால் வந்தால்  கடுதாசி வந்திருக்கு  என்றுதான் சொல்வார்கள்.லெட்டர்னு சொல்லமாட்டார்கள்.
பாலிதீன் பைகளை சவுக்காயப் பை என்பார்கள்.


உண்டனா  செலவழிக்காத என்றால் நிறைய  செலவழிக்காத என்று அர்த்தம்.

என் தாத்தா வெஞ்சனம் வைம்மா என்றால் எனக்கு சிரிப்பு வந்திடும்.வெஞ்சனம் என்றால் என்னனு கேட்டபோது கடிச்சிக்கிறதுதான் என்றார்.அப்படினா சைடிஷ்.சாப்பிடும்போது  சைடிஷ் சேர்த்து சாப்பிடுவோமே அதன் பெயர்தான் வெஞ்சனம்.நல்லா மென்னு சாப்பிடுனு சொல்வதற்கு நல்லா மெண்டு தின்னு என்பார்கள்.மீதமாகும் உணவை குளுதாடியில் கொட்டு என்பார்கள்.குளுதாடி என்றால் மாட்டுக்கு தண்ணீர்,உணவு வைப்பதற்கான தொட்டி.

கூதடிக்குது என்பார்கள்.அப்படியென்றால் குளுருகிறது என்று அர்த்தம்.என் மாமாவுடன் கடைக்கு சென்றேன்,அப்போது சாலையோரம் பைசா புதைந்துகிடப்பது போல் மேல் தோற்றம் தெரிந்தது.அருகில் வந்து பார்த்தால் சோடாமூடி  புதைந்துகிடந்தது.இந்த சிங்கி என்னைய பலதடவை ஏமாற்றியிருக்கு என்றார்.சிங்கி என்றால் என்னவென்று கேட்டால் அந்த சோடாமூடி பெயர்தான் சிங்கி என்றார்.
 
நாம் செல்லப்பெயர் வைத்து அழைப்பது போல் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டினரை அடையாளம் சொல்ல தனித்தனி பட்டபெயர் இருக்கும்.அதாவது களத்து மேட்டுக்காரேன்,கூலாச்சி,மற்றும் பூர்வீக ஊர்களின் பெயர்கள் -கோவில்பட்டியா,கொண்டையம்பட்டிக்காரி,அய்யனம்பட்டியா....மற்றும் ஜாதிகளின் பெயர்களும் இடம்பெறும்.

சில வார்த்தைகள் புரியாமல் இருந்தாலும் ’வாம்மா....’’ச்சொல்லுப்பா’அடி ஆத்தே,அவுக சொன்னாக,வந்தாக,அவங்கே வாந்தாய்ங்கே,போனாங்கே,பிள்ள,எம்புட்டு,இம்புட்டு,எத்தே மொக்கம்(எவ்வளவு பெரிய),எத்தே தண்டி(எவ்வளவு கனம்/நீளம்/பெரிய), அங்கிட்டு,இங்கிட்டுஅம்மாச்சி,அம்மத்தா(அம்மாவின் அம்மா),அப்பத்தா(அப்பாவின் அம்மா),மதினி(அண்ணி),பைய நட(மெதுவா நட) இப்படி பல தமிழ் வார்த்தைகளுக்கு எனக்கு தமிழிலே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியிருந்தது.இப்போதைக்கு இவைகள் மட்டுமே நினைவில் உள்ளது.

தற்போழுது காலமாற்றத்தில் சில பேச்சு வழக்குகள் மாறியிருக்கலாம்.சமீபமாக தேனீ மாவட்டம்,மதுரை,உசிலம்பட்டி தமிழை,அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படங்களை பார்த்திருப்போம்.அதுக்காக மதுரைக்காரவுக தலை வாராம,பரட்டையாகவே இருப்பாங்கன்னு முடிவுபன்னிடாதீக.ரொம்ப பாசக்கார பயபுள்ளைக!உழைப்பாளிக!வம்புக்கு போகமாட்டாங்கே,வந்த வம்ப விடமாட்டாங்கே,நியாயமா நடந்துப்பாங்கேனு சொன்னேஏ....

13 comments:

Anandan said...

மிக நல்ல பதிவு...எனது மதுரை நினைவுகளை தட்டி எழுப்பியது..எப்பொழுதும் மண் மனம் மாறாத மதுரை..மதுரைக்காரன் என்று சொல்லிக்கொள்வ்தில் பெருமைப்படும் தமிழன் நான்..

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மிகவும் ரசித்தேன் மதுரை தமிழை.
வாழ்த்துக்கள் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

மதுரைத் தமிழ்.... கேட்க இனிக்குது...

ட்

ஜெய்லானி said...

இதுல பல வார்த்தைகள் ..எங்க ஊர் வயதானவர்கள் பேசி கேட்டதுண்டு.அதனால நிறைய வார்த்தைகள் கண்டு பிடிச்சிட்டேன் (( சிதம்பரம் டூ கடலூர் ))

நேரில பேசி கேட்ட விதத்தில் எழுதி இருக்கீங்க .படிக்கவே ஜாலியா இருக்கு :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 4 to 5
INDLI 6 to 7

பாண்டி நாட்டுத் தமிழ் பற்றியும், சொல் வழக்குகள் பற்றியும், அழகாக எழுதியுள்ளீர்கள். அதில் 90% நானும் இங்கு பெரியவர்கள் பேசி கேள்விப்பட்டிருக்கிறேன்.

பெண் தலையில் உள்ளது சுறுமாடு ?
இங்கு எங்கள் ஊரில் சும்மாடு என்பார்கள்.

வாசி, வாசிப்பாயா? என்பதெல்லாம் வெகு சகஜமாக இங்கு எல்லோரும் சொல்லும் வார்த்தைதானுங்க.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

காலை முதல் மாலை வரை வீட்டில் இல்லாமல் வெளியில் அலைச்சல். சற்று தூரத்தில் உள்ள இடத்தில் ’கல்யாண வரவேற்பு’க்கு போகும்படியான நிர்பந்தம். அதனால் மிகத்தாமதமாக பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.

[ஆளைக்காணோமே என்று கவலைப் பட்டிருப்பீர்களோ! என்னவோ?] vgk

Angel said...

அருமையான பகிர்வு ஆச்சி .எங்கப்பா குடும்பம் மதுரை உத்தமபாளையம்
ஆனா நான் பிறந்தது தருமபுரி .எனக்கு மதுரை மொழிநடையை அனுபவிக்க கிட்டல .இன்னும் அத்தை எல்லாம் அங்கதான் இருக்காக .அவுக பேசும்போது
தனி அழகுப்பா

raji said...

மதுரை தமிழ் என்றும் இனிமைதான்.
மதுரைத் தமிழ் மணக்கும் என்றால் கொங்கு தமிழ் கொஞ்சும்.
ஒவ்வொரு தமிழிற்கும் ஒரு வித சிறப்பு
உண்டுதான்.இன்னாமே என்று கூவப்படும் சென்னைச் செந்தமிழ் தவிர.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஎன் அம்மாச்சி ஊரில் கொலாயில் கொண்ட பானைய வைனு சொன்னபோதும் புரியாமல் விழித்ததுண்டுஃஃஃஃ

நமம இடங்களில் குழாய் என்று தான் சொல்கிறோம் ஆனால் அதுவும் தமிழல்லவே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
யாரிந்த பதிவுலக கணக்குத் திருடர்கள்-சில ஆதாரங்களுடன்

கீதமஞ்சரி said...

மதுரைத்தமிழ் மதுரமாயுள்ளது. வாசிக்கிறது, சொளகு, கொடக்கல் போன்றவற்றை திருச்சி, தஞ்சை பகுதிகளில் கேட்டிருக்கிறேன். மற்ற வார்த்தைகள் புதியவை. சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்.

ADHI VENKAT said...

மதுரைத் தமிழ் வித்தியாசமாக அதே சமயம் அழகாக இருக்கும்.
என் அம்மாவின் ஊரும் நான் பிறந்ததும் சிவகங்கை மாவட்டம் என்பதால் மதுரை தமிழ் எனக்கு பழக்கம்.
தவளைப்பானை - சர்வம் என்று சொல்வோம்.
சொளகு எங்கள் வீட்டிலும் இருந்தது.கையில் பிடித்து புடைக்கும் இடம் அகலமாகவும், கொட்டும் இடம் குறுகலாகவும் இருக்கும்.

திட்டுவதை வைவது என்பார்கள்.
அங்கிட்டு, இங்கிட்டு என்று சொல்வார்கள்.
இப்போதும் மதுரையிலும் சிவகங்கையிலும் இருக்கும் என் மாமாக்கள் வேகமாக பேசும் போது சிரிப்பாகத் தான் இருக்கும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆனந்தன்

முதல் வருகையாக மதுரைக்காரர் வந்ததில் மகிழ்ச்சி.நன்றிங்க

@ரத்னவேல் சார்
வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி சார்

@வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி

@ஜெய்லானி
இப்போ அதிக ஊர்களில் மதுரைத் தமிழ் பரவிதான் உள்ளது.மதுரைக்காரர்களின் இடம்பெயர்ப்பு கூட காரணமாக இருக்கலாம்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@கோபாலகிருஷ்ணன் சார்
ஆமாம் சார்,திருச்சியில் அதிகமாக இதே ஸ்லாங்தான்.என் மாமியார் வீட்டின் பக்கத்துவீட்டார் மயிலம்பட்டியை சேர்ந்தவர்.அப்படியே மதுரைத் தமிழ்தான் பேசுவார்கள்.வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஏஞ்சலின்.
கருத்து பகிர்விற்கு நன்றி.எங்கெங்கோ பிறந்து,வளர்ந்து எங்கையோ வாழ்கிறோம்னு அவ்வப்போது நினைப்பதுண்டு.உங்க பின்னூட்டமும் அதை நினக்க வைக்கிறது.எப்படியோ எல்லோரும் நல்லபடியா வாழனும்.

@ராஜி
வாங்க,கொங்கு தமிழர்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டவில்லை.சென்னை தமிழ் இப்போ எல்லா த்மிழ் சீரியல்கள் பாத்தால்கூட கத்துக்கலாம்.நன்றிங்க.

@ம.தி.சுதா
//நமம இடங்களில் குழாய் என்று தான் சொல்கிறோம் ஆனால் அதுவும் தமிழல்லவே...//

’ழ’ வை பேசும்தமிழில் சரியாக உச்சரிக்காமல்தான் ‘கொலாய்’ என்பார்கள்.

அதுவும் தமிழ் இல்லையா?பிறகு அது எந்த மொழி?வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@கீதா
வாங்க,பகிர்வான கருத்திற்கு நன்றிங்க.

ஆச்சி ஸ்ரீதர் said...

@என் ராஜபாட்டை ராஜா

உங்கள் வருகை மறக்க முடியாத ஒன்று.வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.